ஆயுர்வேத அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் உண்ணாவிரதம்

ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயுர்வேத அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் உண்ணாவிரதம்
Published on

டாக்டர்கள் உண்ணாவிரதம்

ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த ஆணையை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று முதல் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

அதன்படி, ஈரோடு பெருந்துறை ரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் டாக்டர் பிரசாத் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. சிறப்பு அழைப்பாளராக தேசிய துணைத் தலைவர் டாக்டர் ராஜா கலந்து கொண்டார்.

அறுவை சிகிச்சை

அதைத்தொடர்ந்து டாக்டர் ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஆயுர்வேதம் படித்தவர்கள் அலோபதி முறையில் 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை செய்ய மத்திய அரசு அனுமதித்து உள்ளது. இந்த சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தை சார்ந்தது. முறையான பயிற்சி இல்லாமல், ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால், நோயாளிகள் கடும் பாதிப்பை சந்திப்பர். எனவே, இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும் நிதி ஆயோக் அமைப்பு 4 குழுக்களை அமைத்து மருத்துவ கல்வி மற்றும் பொதுமக்களுக்கான சுகாதார முறைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகியவற்றை நவீன மருத்துவம் ஆயுஷ் என்று ஒரே கலவை முறைக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து உள்ளது.

60 இடங்களில் போராட்டம்

இதன் மூலமாக மருத்துவமுறைகள் கலப்படம் செய்யப்பட்டு, நம் நாட்டின் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை முழுவதும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே நிதி ஆயோக் அமைத்துள்ள குழுக்களை கலைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது கட்டமாக நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளோம். ஈரோட்டில் இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 8-ந்தேதி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

முதல் நாள் போராட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதியை சோந்த டாக்டர்கள் பங்கேற்று உள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் மாவட்டத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்த இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் பங்கேற்பார்கள். நாடு முழுவதும் 60 இடங்களில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் டாக்டர்கள் பங்கேற்க உள்ளனர். டாக்டர்கள் போராட்டத்தால் மருத்துவ சேவை பாதிக்கப்படாது.

இவ்வாறு டாக்டர் ராஜா கூறினார்.

இந்த போராட்டத்தில், இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் டாக்டர்கள் செந்தில்வேலு, சுதாகர், மல்லிகா, அபுல்ஹசன் உள்ளிட்ட ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com