இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம் சென்னையில் 45 பேர் கைது

அரசு பள்ளிகளை மூடக்கூடாது என வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம் சென்னையில் 45 பேர் கைது
Published on

சென்னை,

அரசு பள்ளிகளை மூடக்கூடாது என வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் முன்பு 12-ந் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதையொட்டி போலீசார் முன்எச்சரிக்கையாக டி.பி.ஐ. வளாகம் முன்பு இரும்பு தடுப்பு வேலி அமைத்து இருந்தனர்.

அறிவித்தபடி இந்திய மாணவர் சங்க தமிழ்நாடு கிளை சார்பில் டி.பி.ஐ. வளாகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் உச்சிமாகாளி தலைமை தாங்கினார். மாநில தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். போராட்டத்தின் போது உச்சிமாகாளி நிருபர்களிடம் கூறியதாவது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் முழுமையாக பின்பற்ற வேண்டும். சில தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளை நடக்கிறது. இதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி 15-ந் தேதிக்குள் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்கும் வகையில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்.

நீட் தேர்வால் தமிழக மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். எனவே நீட் தேர்வை தமிழகத்தில் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 9 மாணவிகள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com