மீனவர்கள் நலனில் தனி அக்கறை; கடல் சீற்றத்தில் இருந்து மீனவ கிராமங்களை காப்பாற்ற கூடுதல் தூண்டில் வளைவுகள் - காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வாக்குறுதி

கிள்ளியூர் தொகுதியில் கடல் சீற்றத்தில் இருந்து மீனவ கிராமங்களை காப்பாற்ற தேவையான இடங்களில் கூடுதல் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் தேர்தல் பிரசாரத்தில் கூறினார்.
மீனவர்கள் நலனில் தனி அக்கறை; கடல் சீற்றத்தில் இருந்து மீனவ கிராமங்களை காப்பாற்ற கூடுதல் தூண்டில் வளைவுகள் - காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வாக்குறுதி
Published on

கருங்கல்,

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். இவர் இனயம், குறும்பனை போன்ற பகுதிகளில் உள்ள ஆலயங்களின் பங்கு அருட்பணியாளர்கள் மற்றும் தலைச்சுமடு மூலம் மீன் விற்பனை செய்யும் மீனவர்கள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பங்கு அருட்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக பொதுமக்களுக்கு வசதியாக குறும்பனையை தனி கிராம ஊராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் ஏற்படும் கடல்சீற்றத்தால் மீனவ கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பலர் வீடுகளை இழந்து அவதி படுகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மீனவர்கள் எளிதில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வசதியாகவும், விசைப்படகுகள் மற்றும் படகுகளை நிறுத்தவும் குறும்பனையில் மினி மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும். தலைசுமடு மூலம் மீன் விற்பனை செய்யும் மீனவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து வேட்பாளர் ராஜேஷ்குமார் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

கடற்கரை கிராமங்களில் எனது முயற்சியால் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மீனவ கிராமங்களில் மீனவர் ஓய்வறைகள், பல்நோக்கு கட்டிடங்கள், உயர் கோபுர சோலார் மின் விளக்குகள், அரசு பள்ளிகளுக்கு கட்டிடங்கள், இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. கிள்ளியூர் தொகுதியில் சேதமடைந்த பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மக்கள் நலப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது மீனவ மக்கள் இருசக்கர வாகனம் வேண்டும், குறும்பனையில் மினி மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் நலனில் தனி அக்கறை காட்டப்படும்.

கடற்சீற்றத்தில் இருந்து மீனவ கிராமங்களை காப்பாற்ற தேவையான இடங்களில் கூடுதல் தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் மீனவர்கள் ஆண்டுதோறும் சந்திக்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

ஸ்டாலின் தலைமையில் மக்கள் நலன்காக்கும் அரசு அமைய அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரான எனக்கும் (ராஜேஷ் குமார்) கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளரான விஜய் வசந்துக்கும் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com