சங்கராபுரம் அருகே பரபரப்பு கிராமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல்; 15 பேர் கைது துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு

சங்கராபுரம் அருகே கிராமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அருகே பரபரப்பு கிராமத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல்; 15 பேர் கைது துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு
Published on

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் காலனியை சேர்ந்தவா அழகப்பிள்ளை மகன் பிரசாந்த். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்று இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன், சிங்காரவேல் மகன் தங்கவேல் ஆகியோர் பிரசாந்தை பார்த்து உன் தங்கச்சியை எங்கள் பகுதிக்கு நடனம் கற்றுத்தர வரச்சொல் என தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறாக மாறியது.

50 பேர் கும்பல்

இதில் ஊராங்காணி கிராமத்தைச் சேர்ந்த மாரி தலைமையில் இளையராஜா, விஜய், ரமேஷ், வேலு உள்ளிட்ட 50 பேரை கொண்ட கும்பல் கையில் தடி, அரிவாள், உருட்டுகட்டையுடன் எஸ்.வி.பாளையம் காலனி பகுதிக்குள் நுழைந்து சாதி பெயரை சால்லி திட்டினர். பின்னர் அங்கிருந்து ஊராங்காணி கிராமம் குளத்துமேட்டு தெருவுக்கு வந்த அவர்கள் அங்குள்ள பெட்டிக்கடையை அடித்து உடைத்தனர். பின்னர் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தையும் அடித்து நொறுக்கினர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜி, ராமநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் ஓடி விட்டது.

இதுகுறித்து அழகப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் உள்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விஜய், ரமேஷ், இளையராஜா உள்பட 15 பேரை கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு கிராமங்களுக்கிடைய பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் பதற்றத்தை தடுக்கும் வகையில் போலீஸ் அணிவகுப்பும் நடைபெற்றது. வெளியூரில் இருந்து யாரும் கிராமத்திற்கு வராத வகையில் பேரிகார்டு மூலம் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com