தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலையடுத்து வேலூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Published on

வேலூர்,

பாகிஸ்தானை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாகவும், அவர்கள் பயங்கர நாசவேலையில் ஈடுபட உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகமாக வருகை தரும் வேலூர் கோட்டை, ஸ்ரீபுரம் தங்ககோவில், மால்கள், கோவில்கள், கல்விநிறுவனங்கள், மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஸ்ரீபுரம் தங்ககோவில், கோட்டை, கோவிலுக்கு வருபவர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட மாவட்டத்தின் முக்கிய ரெயில் நிலையங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி சோதனைக்கு பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஸ்ரீபுரம், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை செய்யப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை உள்பட முக்கிய சாலைகளில் போலீசார் வாகனங்களில் சென்று ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான கிறிஸ்டியான்பேட்டையில் வாகன தணிக்கை மற்றும் சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று முன்தினம் சாமிங் ஆபரேஷன் என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 435 தங்கும் விடுதிகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு உஷார் நிலையில் இருக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com