மருந்துக்கடையில் காய்ச்சலுக்கு மாத்திரை வாங்குவோர் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் - நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்

தென்காசியில் மருந்துக்கடைகளில் பொதுமக்கள் காய்ச்சலுக்கு மாத்திரைவாங்குவோர் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என மருந்து கடை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ஹசீனா தெரிவித்தார்.
மருந்துக்கடையில் காய்ச்சலுக்கு மாத்திரை வாங்குவோர் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் - நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்
Published on

தென்காசி,

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தொடர்ந்து பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் தொற்று ஏற்படுவதை ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நோயாளிகள் எளிதில் குணமடைய வாய்ப்பு உள்ளது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று தென்காசி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவின்பேரில் தென்காசியில் உள்ள மருந்து கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் கைலாச சுந்தரம், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆணையாளர் ஹசீனா கூறியதாவது:-

கொரோனா ஒழிப்பில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு கொரோனாவை ஒழிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தென்காசி நகராட்சி நிர்வாகம் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மருந்து கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்க வேண்டாம். அந்த மருந்து சீட்டுகளும் 2 மாதங்களுக்கு உட்பட்ட தேதியில் இருக்க வேண்டும். காய்ச்சலுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டால் அதை வாங்குபவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்களை வாங்கி நகராட்சி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அவர்களை நகராட்சி சுகாதார பணியாளர்கள் கண்காணித்து தேவையான உதவிகளை செய்வார்கள். இதுதொடர்பான நடவடிக்கைகளில் நகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருந்துக் கடை உரிமையாளர்கள் கூறுகையில், காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசெட்டமால், குரோசின் போன்ற மாத்திரைகளை மருந்துக்கடைகள் அல்லாமல் பெட்டிக்கடைகள் ஷாப் கடைகள் போன்றவற்றில் விற்பனை செய்கிறார்கள். அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். நகரசபை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com