

அனுப்பர்பாளையம்,
திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியில் 15 வேலம்பாளையம் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். எனவே அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவருக்கு தமிழ் தெரியாததால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்பதும் அதே பகுதியை சேர்ந்த அத்திமர தோட்டம் பகுதியில் தங்கி இருந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் அவரிடம் உரிய ஆவணங்கள் உள்ளதும், பலர் இதுபோல் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
அந்த வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை சம்பந்தப்பட்ட இடத்துக்கு அழைத்து சென்று அங்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்காள தேசத்தை சேர்ந்த 18 பேர் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் திருப்பூருக்கு எப்படி இங்கு வந்தனர். எவ்வளவு காலம் தங்கியுள்ளனர் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். அத்துடன் அவர்கள் வேலை பார்த்து வரும் பனியன் நிறுவனங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதே பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 10 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.