

மும்பை,
பூச்சி தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு மாநில அரசு சார்பில் ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர்கள் நாசம்
மராட்டிய கிராமபுறங்களில் உள்ள சுமார் 34 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பூச்சி தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பயிர்கள் நாசமடைந்து விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து மாநில அரசு சார்பில் பூச்சி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இதற்காக ரூ.3 ஆயிரத்து 373 கோடி வழங்குமாறு மத்திய அரசிடம் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
ரூ.1,100 கோடி
இந்தநிலையில் மத்திய அரசு நிதி ஒதுக்கும் முன்பாக மாநில அரசு தனது பங்காக ரூ.1,100 கோடி இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மராட்டிய விவசாயத்துறை முதன்மை செயலாளர் பிஜய் குமார் கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாராக உள்ளது. இதன்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக மாநில அரசு சார்பில் ரூ. ஆயிரத்து 100 கோடி ஒதுக்கப்பட்டு அவை மாவட்ட கலெக்டர்கள் மூலமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.