கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார தொழிலாளர்கள் முற்றுகை

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார தொழிலாளர்கள் முற்றுகை
Published on

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

அப்போது தமிழ்நாடு சுகாதார தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு வேலை அளிக்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ், அமைப்பாளர் கொண்டவெள்ளை தலைமையில் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக கலெக்டரிடம் வழங்கினர்.

இதேபோல் மதுரை விஸ்வநாதபுரம் கபிலர் மற்றும் அகத்தியர் தெருவை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் தெருக்களில் பொதுப்பாதையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

உசிலம்பட்டி தாலுகா குறவக்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அதனையே நம்பி பிழைப்பு நடத்திவரும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே 100 நாள் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com