

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பஸ்கள், குறைவான கிலோமீட்டர் இயக்கப்படுவதை காரணம் காட்டி ஷிப்ட் அலவன்ஸ், பேட்டா ஆகியவற்றை குறைக்க கூடாது. கொரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து இரவு-பகல் பாராமல் உழைத்துவரும் பணிமனை ஊழியர்களுக்கு வெகுமதி வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பண பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொ.மு.ச. மாவட்ட நிர்வாகி ரவிச்சந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முகமதலி ஜின்னா மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
அறந்தாங்கி அரசு பணிமனை முன்பு தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் யோகராஜ் தலைமை வகித்தார். இதில், தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மத்திய சங்க தலைவர் ந.அடைக்கலம் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் முத்தையா, சி.ஐ.டி.யூ. கிளைச் செயலாளர் கண்ணன், ஏ.ஏ.எல்.எல்.எப். மத்திய சங்க செயலாளர் பொன்.நாகராஜன், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஆர்.சாகுல் அமீது உள்பட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே, சி.ஐ.டி.யூ., எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.