நெல்லிக்குப்பம் கடைவீதியில் கண்காணிப்பு கேமராக்கள் - போலீஸ் சூப்பிரண்டு சரவணன் இயக்கி வைத்தார்

நெல்லிக்குப்பம் கடைவீதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று இயக்கி வைத்தார்.
நெல்லிக்குப்பம் கடைவீதியில் கண்காணிப்பு கேமராக்கள் - போலீஸ் சூப்பிரண்டு சரவணன் இயக்கி வைத்தார்
Published on

கடலூர்,

நெல்லிக்குப்பம் வர்த்தக சங்கம், ஈ.ஐ.டி.பாரி மற்றும் மிட்டாய் தொழிற்சாலை சார்பில் நெல்லிக்குப்பம் நகர கடை வீதிகளில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறை நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அதன் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி வர்த்தக சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். நகர அனைத்து தொழில் வர்த்தகர் சங்க தலைவர் ஷேக்தாவூது, செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

வட மாநிலங்களை விட தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருக்கிறதால், வடமாநிலத்தவர்கள் நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் வடமாநில கிரிமினல்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இங்கு குற்றங்களை நிகழ்த்துகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கிறது. எனவே அதற்கு தகுந்த மாதிரி நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

நான் தர்மபுரியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினேன். அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் முயன்றனர். அவர்கள் வெல்டிங் கருவி மூலம் நகைக்கடையின் கதவை உடைத்த போது, கதவில் பொருத்தப்பட்டு இருந்த சென்சார் கருவி மூலம் உள்ளூர் துணைபோலீஸ் சூப்பிரண்டுக்கும், இன்ஸ்பெக்டருக்கும், கடை உரிமையாளருக்கும் தகவல் சென்றது. உடனே அங்கு போலீசார் விரைந்து சென்றதால் 15 கிலோ நகைகள் தப்பியது. எனவே நகைக்கடைகளிலும், வீடுகளிலும் 4-வது கண் என்று சொல்லக்கூடிய கண்காணிப்பு கேமராக்களையும், சென்சார் கருவிகளையும் பொருத்த வேண்டியது இந்த காலத்தில் அத்தியாவசியமானதாக இருக்கிறது.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேசினார்.

விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஈ.ஐ.டி. பாரி அதிகாரி சுரேஷ், மிட்டாய் தொழிற்சாலை அதிகாரி முருகன், வர்த்தக சங்க பொருளாளர் சம்சுதீன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேதுராஜன் மற்றும் வர்த்தக சங்க அமைப்பாளர் அமர்நாதன், ராம்சிங் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இணைசெயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com