

ராமேசுவரம்,
பாம்பன் கடலில் நான்குவழிச்சாலை புதிய ரோடு பாலம் அமையும் இடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஒப்புதல்
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் உள்ளிட்ட பல வாகனங்கள் மூலம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதன் இடையே ராமநாதபுரம்- ராமேசுவரம் இடையே தற்போது பயன்பாட்டில் உள்ள இருவழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதற்காக ராமநாதபுரம்- ராமேசுவரம் இடையே நான்கு வழி சாலைக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே உள்ள இரு வழி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதால் பாம்பன் கடலில் மேலும் புதிதாக ஒரு ரோடு பாலம் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆய்வு
பாம்பன் கடல் பகுதியில் புதிய ரோடு பாலம் அமைய உள்ள பகுதியை நேற்று ஆய்வு செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி ராமசாமி, திட்ட இயக்குனர் சங்கர் மற்றும் அதிகாரிகள் பலர் பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி கடலில் புதிய பாலம் அமைய உள்ள கடல் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இந்த புதிய ரோடு பாலத்திற்கான திட்ட வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறும்போது, ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை அமைய உள்ள இடத்தில் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான்கு வழிச்சாலையாக ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே மாற்றப்பட உள்ளதால் பாம்பன் கடலில் மேலும் புதிதாக ஒரு பாலம் கட்டப்பட்டு உள்ளது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு விட்டது.
4 வழிச்சாலை
தற்போது உள்ள ஒரு பாலத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தென் கடல் பகுதியில் அமைய உள்ளது. அதுபோல் பாம்பன் பாலத்தின் தெற்கு பகுதியில் புதிய நான்கு வழிச்சாலை அமைய உள்ளது. ராமேசுவரம் நகருக்குள் நான்கு வழிச்சாலை அமையாது. ராமேசுவரம் நகரின் பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் ரயில்வே நிலையத்தை தாண்டி நான்கு வழிச்சாலை வரும் பாதையாக திட்டமிடப்பட்டு உள்ளது. முழுமையாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த பின்னர் ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.