கர்ப்பிணி பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் காமராஜ் மருத்துவமனையில் அனுமதி

கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் காமராஜ் திருச்சி சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்ப்பிணி பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் காமராஜ் மருத்துவமனையில் அனுமதி
Published on

திருச்சி,

கர்ப்பிணி பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் காமராஜ் திருச்சி சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா என்கிற தர்மராஜா (வயது 34). இவருடைய மனைவி உஷா. இவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 7-ந் தேதி மாலை ராஜா தனது மனைவி உஷாவுடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்றபோது, துவாக்குடி சுங்கச்சாவடி அருகே அவரை போலீசார் வழிமறித்தனர். அவரிடம் ஏன்? ஹெல்மெட் போடவில்லை என்று கூறி இன்ஸ்பெக்டர் காமராஜ் வாக்குவாதம் செய்தார்.

இதனால் ராஜா மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சென்று விட்டார். இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காமராஜ் ஸ்கூட்டரில் அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச் சென்று ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் அவர் நிலைதடுமாறி மனைவியுடன் கீழே விழுந்தார். அப்போது உஷா பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாய்லர்ஆலை போலீசார் இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் திருச்சி சிறைக்குள் கைதிகள் அன்றாட செய்திகளை நாளிதழ்கள் மூலம் படித்து தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. சிறைக்கு வெளியே ஏதேனும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய வழக்குகளில் சிக்கி சிறைக்கு செல்லும் முக்கிய நபர்களை குறிவைத்து ஒரு சில கைதிகள் தாக்கும் சம்பவமும் அவ்வப்போது நடைபெறும்.

இதனால் அதுபோன்ற வழக்குகளில் வரும் நபர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இந்தநிலையில் ராஜாவின் மனைவி உஷா பலியான சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது மற்ற கைதிகள் கோபத்தில் இருப்பதாகவும், இதனால் அவரை தாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானதால் சிறைக்குள் காமராஜை உயர் பாதுகாப்பு அறையில் வைத்திருந்தனர்.

இதற்கிடையே சம்பவத்தன்று ராஜா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துவிட்டு ஸ்கூட்டரில் சென்றபோது தவறி விழுந்ததில் காமராஜுக்கும் தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதற்காக அவர் நேற்று முன்தினம் மாலை திருச்சி சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பலத்த பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com