பண்டிகை காலங்களில் பணத்துக்கு பதிலாக இலவச துணி வழங்கினால் ரூ.7 கோடி மிச்சமாகும் - அமைச்சர் கந்தசாமி தகவல்

பண்டிகை காலங்களில் ரொக்கப்பணத்துக்கு பதிலாக இலவச துணி வழங்கினால் ஆண்டுக்கு ரூ.7 கோடி மிச்சமாகும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
பண்டிகை காலங்களில் பணத்துக்கு பதிலாக இலவச துணி வழங்கினால் ரூ.7 கோடி மிச்சமாகும் - அமைச்சர் கந்தசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்று பேசினார்.

விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

புதுச்சேரியில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக உள்ளது. இறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளது. பெண்குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

அவர்களுக்காக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பண்டிகை காலங்களில் இலவச துணிகள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால் இப்போது துணிகளுக்கு பதிலாக பணமாகவே வழங்கவேண்டும் என்று கவர்னர் கூறுகிறார். துணி கொடுத்தால் ஒரு குடும்பத்துக்கு ரூ.585 மட்டுமே செலவாகும்.

இப்போது பணமாக கொடுப்பதால் ரூ.1000 செலவாகிறது. எனவே துணியாக கொடுத்தால் ஆண்டுக்கு ரூ.7 கோடி மிச்சமாகும். அதை வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை நிலவுகிறது. இதற்கு காரணம் கடந்த ஆட்சியில் அளவுக்கு அதிகமாக வேலைக்கு ஆட்களை பணிக்கு அமர்த்தியதே காரணம்.

மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது புதுச்சேரிக்கு 90 சதவீத நிதி மானியமாக தரப்பட்டது. ஆனால் அதை இப்போது 26 சதவீதமாக குறைத்துவிட்டனர்.

அரசுத்துறைகளில் 7 ஆயிரத்து 500 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களைக்கூட இப்போது நிரப்ப முடியவில்லை. அரசு தொழிற்சாலைகளே மூடக்கூடிய நிலை உள்ளது. பாப்ஸ்கோ, பாசிக் என பல அரசு நிறுவனங்களில் சம்பளம்போட முடியாத நிலை நிலவுகிறது.

சட்டமன்றத்தின் முடிவின்படி உள்ளாட்சி தேர்தல் ஆணையரை நியமித்தோம். ஆனால் அதற்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள். சட்டமன்றத்துக்கே அதிகாரம் இல்லாதபோது நாடாளுமன்றத்துக்கு மட்டும் எப்படி அதிகாரம் வரும்?

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., மகளிர் ஆணைய தலைவி ராணி ராஜன்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் திட்ட அதிகாரி சரோஜினி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com