கோடை காலத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், கலெக்டர் நடராஜன் அறிவுரை

கோடை காலத்தில் பொதுமக்கள் கடை பிடிக்க வேண்டிய வழி முறைகள் பற்றி கலெக்டர் நடராஜன் அறிவுரை வழங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
கோடை காலத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், கலெக்டர் நடராஜன் அறிவுரை
Published on

ராமநாதபுரம்,

கோடை காலத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிவுரை வழங்கி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2018-ம் ஆண்டின் கோடைகாலம் வழக்கமான வெப்பநிலையை விட கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு வெயில் தொடர்பான அபாயங்கள் குறித்து உடன் அணுக ராமநாதபுரம் மாவட்ட பேரிடர் அவரச செயலாக்க பிரிவில் இலவச தொலைபேசி எண் 1077 எந்த நேரத்திலும் செயல்பட்டு வருகிறது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கோடைக்காலத்தில் தாகம் இல்லாவிடினும் அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும். லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழுக்கை ஆடைகள் அணிதல் வேண்டும். வீட்டின் ஜன்னல், கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையிலும் பரா மரித்துக்கொள்ள வேண்டும்.

மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும்.வெளியில் செல்லும்போது தவறாது குடை அல்லது தொப்பி, காலணி அணிந்து செல்ல வேண்டும். இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

வீட்டில் செய்யப்பட்ட சாத நீர், எலுமிச்சை சாறு, மோர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழரசங்கள் போன்றவற்றை பருக வேண்டும். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் தவறாது குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டிவைத்து, அவற்றிற்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் தீவனம் அளிக்க வேண்டும்.

இதுதவிர நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மது, தேனீர், காப்பி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிக புரதம், மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த ஆலோசனைகளை கடைப்பிடித்து கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com