`வருவாய் இழப்பை ஈடுசெய்ய பயிர் காப்பீடு செய்யுங்கள்' - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, விவசாயிகளுக்கு அறிவுரை

வருவாய் இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
`வருவாய் இழப்பை ஈடுசெய்ய பயிர் காப்பீடு செய்யுங்கள்' - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, விவசாயிகளுக்கு அறிவுரை
Published on

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு, நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது. மேலும் நடப்பாண்டில் ரபி பருவ பயிராக நெல் நவரை, நெல் நஞ்சை தரிசு, உளுந்து, மணிலா, எள் மற்றும் கரும்பு பயிர்களை இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 91 வருவாய் கிராமங்களில் நெல் நவரை பயிரும், நெல் நஞ்சை தரிசு 7 குறுவட்டங்களிலும், உளுந்து 9 குறுவட்டங்களிலும், மணிலா 5 குறுவட்டங்களிலும், எள் 3-ம், கரும்பு 5 குறு வட்டங்களிலும் காப்பீடு செய்ய அரசாணை வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.

கடன்பெறா விவசாயிகள், மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தில், பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். எனவே பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் ஒரு ஹெக்டேர் நெல் நவரைக்கு ரூ.1,159-ம், நெல் நஞ்சை தரிசு மற்றும் உளுந்துக்கு ரூ.475, மணிலா ரூ.973, எள் ரூ.289, கரும்பு ரூ.6,422-ம் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் நெல், எள், நெல் நஞ்சை தரிசு உளுந்து ஆகிய பயிர்களுக்கு 1.3.2021-க்குள்ளும், மணிலாவிற்கு 18.1.2021-க்கு முன்பாகவும் முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண தொகையை செலுத்த வேண்டும். பின்னர் அதற்கான ரசீதை பொதுச் சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை அணுகி அறிந்து கொள்ளலாம். எனவே பருவநிலை மாற்றம், எதிர்பாராத வகையில் புதிய வகை பூச்சிநோய் தாக்குதல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றால் பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்வதற்கும் தொடர்ந்து விவசாயிகள் வேளாண் உற்பத்தியினை செய்வதற்கும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் உறுதுணையாக உள்ளதால் சிறிய அளவிலான காப்பீட்டு கட்டணத்தை செலவினமாக கருதாமல் அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர் (சென்னை) கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன், நபார்டு வங்கி மேலாளர் விஜய் நீகர், முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், வேளாண் உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு ) மலர்வண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com