கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: தற்காலிக மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. காய்கறிகள் வாங்க பொதுமக்கள் தற்காலிக மார்க்கெட்டுகளில் குவிந்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: தற்காலிக மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கண்டித்து அனுப்பி வைக்கின்றனர். இதுதவிர லாரிகள், சிறிய டேங்கர் லாரிகள் மூலம் கிருமிநாசினி மருந்துகள் தெளிப்பது உள்ளிட்ட சுகாதார பணிகள் நடந்து வருகின்றன. தூத்துக்குடியில் பாளையங்கோட்டை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் நேற்று வழக்கம் போல் மார்க்கெட்டுகள் இயங்கின. பெரிய மார்க்கெட்டுகளை விடவும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் அதிக அளவு குவிந்தனர் காய்கறிகள் வாங்குவதற்காக சமூக இடைவெளி விட்டு வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர். இதனை போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணித்தனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது.

மாவட்டத்தில் காய்கறிகள், தேங்காய் ஆகிவற்றின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தோசை மாவு, ஆப்பம் மாவு, இடியாப்பம் மாவு உள்ளிட்டவற்றின் தேவை அதிகமாக உள்ளது. சிறிய கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விற்பனையும் நின்றுபோனது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முகக்கவசம், கையை சுத்தம் செய்யும் திரவம் உள்ளிட்டவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுடன் சிலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு கண்காணிப்பில் இருந்த ஒருநபர் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் மற்றும் சுகாதார துறையினர் மடக்கிப்பிடித்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரையில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com