ஊரடங்கிலும் முத்தூர் பகுதிகளில் மரவள்ளிகிழங்கு சாகுபடி பணிகள் தீவிரம்

முத்தூர் கிராம பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு காலத்திலும் மரவள்ளிகிழங்கு சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஊரடங்கிலும் முத்தூர் பகுதிகளில் மரவள்ளிகிழங்கு சாகுபடி பணிகள் தீவிரம்
Published on

முத்தூர்,

திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து ஆண்டு தோறும் இரு பிரிவுகளாக கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து இந்த ஆண்டு கீழ்பவானி பாசன பகுதிகளில் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடிக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் முறை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் முத்தூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், ஏரிகள், ஓடை நீரை பயன்படுத்தி எள், நிலக்கடலை விவசாய சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக பணிகள் தொய்வின்றி நடைபெற்றன.

இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய கொடிய நோயான கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த 2 வாரத்திற்கு முன்பு இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியது. இதன்படி மத்திய, மாநில அரசுகள் உத்தரவின்படி கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி காலை 6 மணி வரை தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கிராமப்பகுதிகளில் விவசாயிகள் வேளாண் சாகுபடி பணிகளை உடனடியாக நிறுத்தி வைத்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு கடந்த 4 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் மீண்டும் விவசாய பணிகளை தொடங்க ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளித்து அனுமதி வழங்கியது.

மேலும் விவசாய பணிகளுக்காக உரக்கடைகள், தானிய விதைகள் விற்பனை கடைகளையும் குறிப்பிட்ட நேரங்களில் திறக்கவும் அரசு அனுமதி அளித்தது.

இதனால் விவசாயிகள் தற்போது கீழ்பவானி பாசன கால்வாயில் செல்லும் பவானிசாகர் அணை நீர், மற்றும் கிணற்று நீர் பாசனம் மூலம் 10 மாதங்களில் பலன் தரும் மரவள்ளிகிழங்கு சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.

இதன்படி இப்பகுதி விவசாயிகள் மரவள்ளிகிழங்கு சாகுபடிக்கு பார் கட்டுதல், உழவு பணி, கிழங்கு குச்சி விதைப்பு பணி, அடி உரம் இடுதல், மேல் உரம் இடுதல், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, களை எடுக்கும் பணிகள், அறுவடை பணிகள் என 1 ஏக்கருக்கு மொத்தம் சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை முதலீடு செய்ய வேண்டியது உள்ளது. இதன்படி மரவள்ளிகிழங்கு சாகுபடியில் முதல் கட்டமாக வயல்களை டிராக்டர், கலப்பை மூலம் உழுது, வரிசையாக பார் கட்டி ஒரே சீராக வெட்டிய மரவள்ளிகிழங்கு குச்சிகளை நட்டு சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து தற்போது வயல்களில் நீர் பாய்ச்சும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com