இன்று மகாளய அமாவாசை கன்னியாகுமரி கடலில் தர்ப்பணம் கொடுக்க தடை போலீசார் தீவிர கண்காணிப்பு

மகாளய அமாவாசையையொட்டி இன்று கன்னியாகுமரி கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
இன்று மகாளய அமாவாசை கன்னியாகுமரி கடலில் தர்ப்பணம் கொடுக்க தடை போலீசார் தீவிர கண்காணிப்பு
Published on

நாகர்கோவில்,

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய அமாவாசை தினங்களில் பொதுமக்கள் நீர்நிலைகளில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

அவ்வாறு வழிபட்டால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து அவர்களின் ஆசி குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

குமரி மாவட்டத்திலும் ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை தினங்களில் நீர்நிலைகளில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன்படி கன்னியாகுமரியிலும் குமரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

தர்ப்பணம் கொடுக்க தடை

கொரோனா ஊரடங்கு காணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், கடலில் நீராடவும் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 1-ந்தேதி ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடற்கரைக்கு செல்வதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.

இந்த ஆண்டு புரட்டாசி மகாளய அமாவாசை இன்று (வியாழக்கிழமை) வருகிறது. கன்னியாகுமரி கடலில் பொதுமக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. எனவே இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பலி தர்ப்பண நிகழ்ச்சி தொடர்பாக நீர்நிலை பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு

இந்த தடையை மீறி கன்னியாகுமரி கடற்கரையில் யாரேனும் சுற்றி திரிகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசார் நேற்று மாலையில் இருந்தே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com