சொத்துகளை அபகரிக்கும் நோக்கமா?, ஒரே நபருக்கு இருவேறு இடங்களில் வழங்கப்பட்ட இறப்புச்சான்றிதழ் - விரிவான விசாரணைக்கு காரைக்குடி கோர்ட்டு உத்தரவு

காரைக்குடியைச் சேர்ந்த வாலிபருக்கு பெங்களூரு, காரைக்குடி என 2 இடங்களில் இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்த காரைக்குடி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சொத்துகளை அபகரிக்கும் நோக்கமா?, ஒரே நபருக்கு இருவேறு இடங்களில் வழங்கப்பட்ட இறப்புச்சான்றிதழ் - விரிவான விசாரணைக்கு காரைக்குடி கோர்ட்டு உத்தரவு
Published on

காரைக்குடி,

காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 35). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், சென்னை வடபழனியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது மகள் சுமதிக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் ரவிக்குமார் திடீரென இறந்து போனார். இதற்கான இறப்புச் சான்றிதழ் ரவிக்குமார் குடும்பத்தினரால் பெங்களூருவில் பெறப்பட்டது.

இதனிடையே ரவிக்குமார் பெயரில் உள்ள சொத்துகளை அபகரிக்கும் நோக்குடன் வெள்ளைச்சாமி காரைக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வைரவன் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் காரைக்குடியில் போலி இறப்புச் சான்றிதழ் பெற்றதாக ரவிக்குமாரின் மாமா பாலசுப்பிரமணியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

ஒரே நபருக்கு இரு வேறு இடங்களில் இறப்புச் சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டது எப்படி? இதில் தொடர்புடைய நகராட்சி அதிகாரிகள் யார், யார் என்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்குடி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு, இது குறித்து வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும், விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com