

அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசு பஸ் மீது லாரி கன்டெய்னர் கவிழ்ந்ததில் பஸ் டிரைவர்கள் உள்பட 19 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பலியான பஸ் டிரைவர்களான கிரீஸ், பைஜூ குறித்த உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றிய விபரம் பின்வருமாறு:-
விபத்துக்குள்ளான கேரள அரசு சொகுசு பஸ்சில் டிரைவர்களாக கிரீஸ், பைஜூ ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். இருவருமே மிகவும் மென்மையான குணம் படைத்தவர்களாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் பணியின்போது பஸ்சில் பயணிக்கும் பயணிகளிடம் கனிவாக பேசுபவர்களாகவும், அவர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுபவர்களாகவும் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருவருமே மிகவும் நல்லவர்கள் என்ற பெயரை பெற்றுள்ளனர். இதற்கு சான்றாக ஒரு சம்பவம் அமைந்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது விபத்தில் பலியான டிரைவர் கிரீஸ் பணியில் இருந்ததால் அவர் பஸ்சை ஓட்டி சென்றுள்ளார். மாற்று டிரைவராக பைஜூ இருந்துள்ளார். அந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சென்ற போது பஸ்சில் பயணம் செய்த திருச்சூரை சேர்ந்த கவிதா வாரியார் என்ற பெண் பயணிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி பைஜூ உடனடியாக கிரீஸிடம் தெரிவித்துள்ளார். இதனால் சுதாரித்து கொண்ட பஸ் டிரைவர் கிரீஸ் மற்ற பயணிகளை பற்றி யோசிக்காமல் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு மரணத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த கவிதா வாரியாரின் நிலைமையை மட்டும் கருத்தில் கொண்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பஸ்சை ஓட்டி சென்றார். பின்னர் கவிதா வாரியாரை கிரீஸ்சும், பைஜூவும் சேர்ந்து அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் ஆஸ்பத்திரிக்கு செலுத்த வேண்டிய முன்தொகையையும் பஸ் பயணிகளிடம் வசூல் செய்த டிக்கெட் பணத்தில் இருந்தே செலுத்தினார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து இருவரும் எர்ணாகுளம் மற்றும் பெங்களூருவில் இருந்த தங்களது உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதேபோல் கவிதா வாரியாரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்கு தாமதம் ஆகும் என்பதால் ஆஸ்பத்திரியில் பெண் பயணியுடன் யாராவது ஒருவர் தங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இதையடுத்து என்ன செய்வது என்று யோசித்த பஸ் டிரைவர்கள் 2 பேரும் பயணியுடன் பைஜூ தங்க முடிவு செய்தனர். இதையடுத்து பஸ்சில் நீண்ட நேரம் காத்திருந்த மற்ற பயணிகளை அழைத்து கொண்டு கிரீஸ் பெங்களூரு நோக்கி பஸ்சை ஓட்டி சென்றார். கவிதா வாரியாரின் உறவினர்கள் வந்த பிறகே பைஜூ அங்கிருந்து விடை பெற்றார். உரிய நேரத்தில் அந்த பயணிக்கு சிகிச்சை அளித்ததால் அவர் உயிர் பிழைத்து கொண்டார். பஸ் பயணியின் உயிரை காப்பாற்றிய 2 பேரையும் பாராட்டி கேரள போக்குவரத்து துறை நிர்வாக இயக்குனர் டாமின் தக்கன்சேரி இருவருக்கும் பாராட்டு கடிதம் வழங்கினார்.
பஸ் பயணத்தின் போது பயணிகளிடம் பெரும்பாலான ஓட்டுனர்கள், நடத்துனர் எரிந்து விழும் நிலையில் இதுபோன்று மனிதாபிமானத்துடனும், பயணிகளிடம் கனிவாக பேசியும் அவர்கள் மீது அக்கறை காட்டியும் அனைவரிடமும் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருந்த கிரீஸ், பைஜூ ஆகிய 2 டிரைவர்களும் நேற்று முன்தினம் அதிகாலை நடைபெற்ற விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் இருவரின் குடும்பத்தினரிடையே மட்டுமின்றி, ஒட்டு மொத்த கேரள போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.