

நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறுகின்ற சிறுபான்மையின பள்ளிக்கூடங்களில் உள்ள சத்துணவு அமைப்பாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. நெல்லை மாவட்டடத்தில் மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் இருந்தன. அதற்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறாமல் இருந்தது. இதில் தகுதியான 700 பேருக்கு நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சத்துணவு அமைப்பாளர் தேர்வுக்கான நேர்முக தேர்வு கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவின் பேரில் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 7 இடங்களில் நடந்தது. இந்த தேர்வை உதவி கலெக்டர், உதவி இயக்குனருக்கு இணையான அதிகாரிகள் தலைமை தாங்கி நடந்தினார்கள். இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்கள் முதலில் சரிபார்க்கப்பட்டன. விதிமுறைகள் சரியாக உள்ளனவா? என்றும் பார்க்கப்பட்டது. மேலும் சில கேள்விகளையும் அதிகாரிகள் கேட்டனர்.
கைக்குழந்தைகளுடன்
இந்த நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு ஏராளமான இளம்பெண்கள் தங்களுடைய கைக்குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வந்து இருந்தனர். நேர்முக தேர்வுக்கு வந்தவர்களை போலீசார் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதித்தனர்.
உடன் வந்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். நேர்முக தேர்வுக்கு வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.