கலெக்டர் அலுவலகத்தில் 3-வது நாளாக அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்முக தேர்வு

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 3-வது நாளாக அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்முக தேர்வு நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் 3-வது நாளாக அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்முக தேர்வு
Published on

நெல்லை,

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் 257 குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும், 628 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும், 720 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களும் என மொத்தம் 1,605 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

நேர்முக தேர்வு

இந்த பணிக்கான நேர்முக தேர்வு கடந்த 8-ந்தேதி தொடங்கியது. முதற்கட்டமாக குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடந்தது. 2-ம் நாளான நேற்று முன்தினம் 3 ஆயிரம் பெண்களுக்கு நேர்முக தேர்வில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

நேற்று 3-வது நாளாக நேர்முக தேர்வு நடந்தது. 2 ஆயிரத்து 914 பெண்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு காலை 9 மணிக்கு வரத் தொடங்கினர். பல பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து இருந்தனர். பெண்கள் கூட்டத்தை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

சான்றிதழ்கள் சரிபார்ப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கீழ் தளம், 2-வது தளம், மாவட்ட வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களில் நேர்முக தேர்வு நடந்தது.

நேற்று நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், வள்ளியூர், தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட 10 வட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையிலான குழுக்கள் சான்றிதழ்களை சரிபார்த்தனர். கல்வி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, வேலைவாய்ப்பு அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

இன்று (திங்கட்கிழமை) நேர்முக தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com