தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் கோவையில் கமல்ஹாசன் பேட்டி

கிராமப்புற பிரச்சினைகளை தீர்க்க தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கோவையில் கமல்ஹாசன் கூறினார்.
தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் கோவையில் கமல்ஹாசன் பேட்டி
Published on

கோவை

கிராமப்புற பிரச்சினைகளை தீர்க்க தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கோவையில் கமல்ஹாசன் கூறினார்.

கலெக்டரிடம் மனு

தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். அதில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவு செய்த அவர், விமானம் மூலம் கோவை வந்தார்.

ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அவருடைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு கமல் ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்தார்.

பின்னர் அவர் கலெக்டர் சமீரனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதன் பிறகு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிராம சபை கூட்டம்

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வில்லை. இதனால் கிராமங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து யாருக்கும் தெரிவது இல்லை.

அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளது. இதனை தீர்க்க வேண்டும் என்றால் உடனடியாக கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். இதுகுறித்து கோவை கலெக்டரை சந்தித்து மனு அளித்தேன். மற்ற மாவட்டங்களில் எங்கள் கட்சி நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு அளிப்பார்கள்.

வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். வருகிற பட்ஜெட்டில் கிராம ஊராட்சிகளுக்கு எவ்வளவு நிதி கொடுக்கிறோம், எந்த நேரத்தில் கொடுக்கிறோம் என்பது குறித்து தனியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை கலெக்டரிடம், கமல்ஹாசன் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

காந்தியின் கனவு

மகாத்மா காந்தியின் கனவான கிராம சுயாட்சிக்காக மக்கள் நீதி மய்யம் குரல் கொடுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்குவதற்காக பல்வேறு களப்பணிகள், கருத்தரங்குகளை முன்னெடுத்து உள்ளோம்.

வருகிற 15-ந் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். இதற்காக கீழ்க்கண்ட நடைமுறை களை செயல்படுத்த வேண்டும்.

7 நாட்களுக்கு முன் கிராமசபை கூட்டத்திற்கு அழைப்பு தர வேண்டும். கிராம சபையில் முன் வைக்கப்பட வேண்டிய கிராம ஊராட்சியின் வரவு -செலவு அறிக்கை, வங்கிக்கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

தேவையான விழிப்புணர்வு

கிராம நலன் கருதி வைக்கப்படும் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டும். கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் தீர்மானம் குறித்த நகல்கள் வழங்கப்பட வேண்டும். கிராம சபை கூட்டத்தை வீடியோ, புகைப்படம் எடுத்து ஆவணப் படுத்த வேண்டும்.

கிராம சபை கூட்டத்தை சுழற்சி முறையில் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் நடத்த வேண்டும். கூட்டத்தில் குறைந்தபட்ச உறுப்பினர்கள் பங்கேற்பதற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்வின்போது மாநில துணைத்தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, மாநில செயலாளர் (பரப்புரை) அனுஷா ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com