தமிழகத்திற்கு 6 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன: கருப்பு பூஞ்சை நோயால் 1,736 பேர் பாதிப்பு; 77 பேர் உயிரிழப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்திற்கு 6 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. கருப்பு பூஞ்சை நோயால் 1,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 77 பேர் உயிரிழந்ததாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு 6 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன: கருப்பு பூஞ்சை நோயால் 1,736 பேர் பாதிப்பு; 77 பேர் உயிரிழப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
Published on

செம்பட்டு,

தமிழகத்திற்கு 6 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. கருப்பு பூஞ்சை நோயால் 1,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 77 பேர் உயிரிழந்ததாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1,736 பேருக்கு கருப்பு பூஞ்சை

கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் 1,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் அளவிற்கு ஆம்படோரிஸம்' மருந்துகள் வேண்டும் என கேட்கப்பட்டது. மத்திய அரசிடமிருந்து 11,796 மருந்துகள் மட்டுமே வந்துள்ளது. இதுவரை பயன்படுத்தப்பட்டு கையிருப்பில் இருப்பது 4,366 உள்ளது.

இதுவரையிலும் 77 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பூசிகள் வரவர உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 1 கோடியே 10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றில் இதுவரை 1 கோடியே 5 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

6 லட்சம் தடுப்பூசிகள் வருகை

மத்திய அரசிடம் இருந்து நேற்று காலை 6 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அவை ஒரு நாளுக்கு 2 லட்சம் வீதம் போடப்பட்டாலும் 3 நாட்கள் வரை பயன்பாட்டில் இருக்கும். அட்டவணைப்படி ஜூன் மாதத்திற்கான 42 லட்சம் தடுப்பூசி மருந்தினை பிரித்துக் கொடுத்து அனுப்புவார்கள்.

இனிமேல் தடுப்பூசி கிடைப்பதில் தடை இருக்காது. கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டும் என்ற அவசியமே கிடையாது. கொரோனா இறப்புகளை மறைக்கக்கூடாது என கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.

இறப்பு காரணத்தில் மாறுபாடு

இறப்புக்கான காரணத்தில் மாறுபாடுகள் இருந்தாலும் இறப்பை சொல்லித்தான் ஆக வேண்டும். நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர்கள் சாதாரணம் ஆகிவிடும் நிலையில், நுரையீரல் பாதிக்கப்பட்டு மற்றும் இணை நோய்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் ஏதேனும் காரணத்திற்காக இருக்கும் போது அவர்கள் கொரோனா தொற்று இல்லை என்றுதான் அர்த்தம்.

ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தலின்படி இறப்பின்போது என்ன நோய் இருந்ததோ? அதைதான் கூறுவார்கள். அந்த வகையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் வசந்தகுமார் எம்.பி. ஆகியோர் உயிருடன் ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டனர். உயிரற்ற சடலமாக வெளியே வரும்போது அவர்களுக்கு நோய் தொற்று இல்லாமல் நெகடிவ்' ஆகத்தான் இருந்தது. எனவே, இருவருக்கும் நெகடிவ் சான்றிதழ் தான் கொடுக்கப்பட்டது. இந்த சான்றிதழ் கொடுப்பதால் எந்த லாபமும் இல்லை.

ஆதரவற்றவர்களுக்கு உதவி

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி என்பதை முதன்முதலில் தமிழக அரசு அறிவித்தது. அதன் பின்னர் மத்திய அரசாங்கமும் அறிவித்தது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களில் கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலனடைந்துள்ளனர். தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது குறித்து மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தப்படும்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவம் தமிழகத்தில் 69 இடங்களில் மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த அலையில் மட்டுமே பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொரு முறையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து வெளியேறும் போது அவர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி உடன் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com