மசாஜ் செய்ய வரச்சொல்லி: தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த - பெண் உள்பட 3 பேர் கைது

மசாஜ் செய்வதாக வரவழைத்து தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மசாஜ் செய்ய வரச்சொல்லி: தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த - பெண் உள்பட 3 பேர் கைது
Published on

புதுச்சேரி,

புதுவை திருமுடி சேதுராமன் நகர் ஆரோக்கிய அம்மாள் கார்டனை சேர்ந்தவர் மஞ்சுநாத். தொழிலதிபரான இவர் ரசாயன பொருட்களை வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கும் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்த முதலியார்பேட்டையை சேர்ந்த உதயகுமாருக்கும் நட்பு இருந்து வந்தது. உதய குமாரின் பியூட்டி பார்லருக்கு மஞ்சுநாத் அடிக்கடி சென்று மசாஜ் செய்துள்ளார்.

இந்நிலையில் உதயகுமார் கடந்த 10-ந்தேதி மஞ்சுநாத்தை தொடர்பு கொண்டு, தான் முதலியார்பேட்டை ஜோதி நகர் 5-வது குறுக்கு தெருவில் புதிதாக பியூட்டி பார்லர் திறந்துள்ளதாகவும், மசாஜ் செய்ய வேண்டும் என்றால் அங்கு வருமாறும் செல்போனில் அழைத்துள்ளார்.

அவரது அழைப்பினை ஏற்று மஞ்சுநாத்தும் அங்கு சென்றுள்ளார். மஞ்சுநாத் வந்ததும் உதயகுமாரும், அவரது நண்பருமான நாமக்கல் மாவட்டம் காந்தி நகரை சேர்ந்த கார்த்திகேயனும் சேர்ந்து மஞ்சுநாத்தை தாக்கி அவரது செல்போனை பறித்துள்ளனர்.

மேலும் அவரை அடித்து உதைத்து செல்போனில் உள்ள வங்கியின் செயலி மூலம் ரூ.5 லட்சத்தை உதயகுமார் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். பின்னர் செல்போன், கைக்கடிகாரத்தை பறித்துகொண்டு பிற்பகலில் விடுவித்துள்ளனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து மஞ்சுநாத் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், வீரபத்திரசாமி ஆகியோர் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

அவர்களது விசாரணையில் உதயகுமார், அவருடைய மனைவி பிரேமா, நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் சேலத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக தனிப் படையினர் சேலம் சென்று அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் ராதா ஆகியோரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் முடக்கி வைக்கப் பட்டது. மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள், 3 செல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மசாஜ் செய்ய வந்த மஞ்சுநாத்தை அவர்கள் ஆபாசமாக படம் எடுத்துள்ளனர்.

பணம் பறித்த விவரத்தை யாரிடமாவது சொன்னால் அந்த படங்களை வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். அந்த படங்களையும் போலீசார் தங்கள் வசப்படுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக தெற்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் கூறும்போது, இதுபோல் பியூட்டி பார்லருக்கு வாருங்கள் என்று கூறுபவர்களிடம் ஏமாற வேண்டாம்.. யாராவது அவ்வாறு செய்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்போது கைதானவர்கள் மசாஜ் செய்வதாக கூறி பணம் பறித்தது இதுதான் முதல் முறையா? அல்லது வேறு யாரிடமாவது? பணம் பறித்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com