மீஞ்சூரில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பு; போலி நிருபர்கள் 6 பேர் கைது

மீஞ்சூரில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில் போலி நிருபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீஞ்சூரில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பு; போலி நிருபர்கள் 6 பேர் கைது
Published on

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், மணலிபுதுநகர் போன்ற பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலி நிருபர்கள் பல்வேறு அமைப்புகளின் பெயரில் செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இவர்கள் தங்களது வாகனங்களில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைமை செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் என்ற பெயரில் 15-க்கும் மேற்பட்டோர் மீஞ்சூர் பஜாரில் உள்ள வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்தனர்.

ஒரு கடைக்கு சென்றவர்கள் உங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளது என கூறி பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வியாபாரி இது குறித்து மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையறிந்த போலி நிருபர்கள் 2 கார்களில் தப்பி சென்றனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலை வல்லூர் கூட்டுசாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேகமாக ஒரு கார் சென்று விட்டது. மற்றொரு காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் தலைமை செயலக அனைத்து பத்திரிக்கையாளர் சங்க விசிட்டிங் கார்டு உட்பட பல்வேறு பத்திரிக்கைகளின் கார்டுகள் அவர்களிடம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் உபயோகப்படுத்திய கார், கேமரா, செல்போன் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் எண்ணூரை சேர்ந்த காசிம்பாஷா (34), தமிழ்பாஷா (31), வியாசர்பாடியை சார்ந்த அப்துல்ரகுமான் (32), அடையார் பகுதியை சேர்ந்த யுவராஜ் (30), வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பாபு (28), சென்னையை சேர்ந்த வருண்குமார் (33) என்பது தெரியவந்தது.

அவர்களில் காசிம்பாஷா இது போன்ற செயல்களில் ஈடுபட்டு சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் அவர்கள் பத்திரிகை பெயர்களை சொல்லி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் போலி நிருபர்களான அவர்களை கைது செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com