

புனே,
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் டிக்-டாக் மோகம் ஆட்டி படைக்கிறது. இந்த செயலிக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் புனேயில் டிக்-டாக் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் மிரட்டும் தொனியில் பொது இடத்தில் கையில் பெரிய அரிவாளை சுழற்றியபடி நடந்து சென்றபடி பேசுகிறார்.
இந்த வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது புனே வாகட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் பிம்பிரி-சிஞ்ச்வாட்டை சேர்ந்த தீபக் அபா தாகலே (வயது23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.