ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக, பிளாட்பாரத்தில் பேட்டரி கார் அறிமுகம்

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பிளாட்பாரத்தில் பேட்டரி கார் அறிமுகப்படுத்தப்பட்டது. நபருக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக, பிளாட்பாரத்தில் பேட்டரி கார் அறிமுகம்
Published on

சூரமங்கலம்,

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் மொத்தம் 5 பிளாட்பாரங்கள் உள்ளன. இவற்றில் ரெயில் வரும் நேரங்களில் பயணிக்கும் பெட்டிக்கு செல்ல மூத்த குடிமக்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு வந்தனர்.

எனவே, பயணிகள் வசதிக்காக சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தின் 3, 4-வது பிளாட்பாரங்களில் மட்டும் மாசு ஏற்படுத்தாத வகையில் பேட்டரி கார் இயக்க அனுமதி பெற்றது.

அதன்படி, நேற்று ஜங்சன் ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில் பேட்டரி கார் அறிமுகம் செய்து, பயணிகள் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட வணிக மேலாளர் கே.மாது கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி வணிக மேலாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். பேட்டரி காரில் பிளாட்பாரங்களில் பயணிக்க மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்த பேட்டரி காரில் செல்ல ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பேட்டரி காரில் பயணிக்க எவ்வித கட்டணம் கிடையாது. பேட்டரி காரில் லக்கேஜ் மற்றும் உடைமைகள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. 4 பயணிகள் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் பேட்டரி காரில் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி கார் ஜி.பி.எஸ். கருவி மூலம் கம்ப்யூட்டரில் கண்காணிக்கப்படும். இதுபோன்ற சேவை, சேலம் ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட ஈரோடு, கோவை ரெயில் நிலையங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com