உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை

கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை
Published on

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மடத்து தெருவில் காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில் மகாமகத்தை முன்னிட்டு கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் 4 உண்டியல்கள் உள்ளன. நேற்றுமுன்தினம் நள்ளிரவு இக்கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் துர்க்கை அம்மன் சன்னதி அருகில் இருந்த உண்டியலை திறக்க முயன்றனர். ஆனால் உண்டியலை திறக்க முடியவில்லை. இதையடுத்து உண்டியல் வைக்கப்பட்டிருந்த பீடத்தை உடைத்து உண்டியலை பெயர்த்தெடுக்க முயற்சி செய்தனர். இந்த முயற்சியும் பலிக்கவில்லை. இதனால் மர்ம நபர்கள் கோவிலில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை பணியாளர்கள் கோவிலுக்கு வந்து நடை திறந்து பார்த்தபோது, உண்டியல் மற்றும் அதன் பீடம் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா

விசாரணையில் கோவிலின் தெற்கு பகுதியில் உள்ள சுவரில் ஏணி வைத்து மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து, உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆராய்ந்தனர். அதில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் 14 வயது சிறுவனுக்கு தொடர்பு இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com