

மதுரை,
சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி மதுரையில் உள்ள பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர்கள் திரண்டனர். போராட்டத்தை சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் குருசாமி தலைம தாங்கினார். மாவட்ட செயலாளர் சோலையன் முன்னிலை வகித்தார்.
அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம், கிராம ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், மோட்டார் வாகன பராமரிப்பு சங்க மாநில தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். பின்னர் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு திருவள்ளுவர் சிலை வழியாக மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே வந்தனர்.அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள்.
அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 300 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.