

பூந்தமல்லி,
நொளம்பூர், மாதா கோவில் நகரை சேர்ந்தவர் அக்பர். மதுரவாயலில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் ஓம்சக்தி நகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த வாலிபர்கள் 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி அக்பர் வைத்திருந்த செல்போன் மற்றும் சைக்கிளை பறித்து சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக மதுரவாயல் போலீசில் அவர் புகார் செய்தார். மேலும் அவர், கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களையும் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு சந்தேகத்தின்பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர், மதுரவாயலை சேர்ந்த ஜெயசீலன் (வயது 26) என்பதும், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஜெயசீலனை கைது செய்தனர்.
மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரவாயலை சேர்ந்த சையது அபுதாகிர் (26), பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜ் (19), நொளம்பூரை சேர்ந்த அருண்குமார் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் ஒன்றும், சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டது. இவர்கள் 4 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பின்னர் 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.