

திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கொரோனா தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்காமல் கொரோனா தொற்று பரவும் விதமாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மணிமேகலை, மாவட்ட துணைத்தலைவர் பிரவீனா, மாநில பொதுச்செயலாளர் டெய்சி உள்பட 50 பேர் மீது புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.