

தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கோடை காலத்தில் வறட்சி நிலவும் பகுதிகளில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசின் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சில இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.
இந்த திட்டத்தின்படி மூக்கனூர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட ஒரு ஆழ்துளை கிணற்றை முறைகேடாக அரசு வாகன டிரைவர் ஒருவரின் நிலத்தில் அமைத்ததாக புகார் எழுந்தது. மேலும் அந்த ஆழ்துளை கிணறு பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க பயன்படுத்தப்படாமல் தனிப்பட்ட நபர்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் மலர்விழி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பணி இடைநீக்கம்
இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அரசு வாகன டிரைவரின் நிலத்தில் ஆழ்துளை கிணற்றை அமைத்து இருப்பது தெரியவந்தது. மேலும் பொது இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தது போல் கணக்கு காட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் முறைகேடு செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார்.