மசினகுடி பகுதியில் இருளர், குரும்பர் இன மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

மசினகுடி பகுதியில் இருளர், குரும்பர் இன ஆதிவாசி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மசினகுடி பகுதியில் இருளர், குரும்பர் இன மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்
Published on

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் இருளர், குரும்பர், பனியர் உள்ளிட்ட 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதில் இருளர், குரும்பர் இன ஆதிவாசி மக்கள் அதிக அளவில் மசினகுடி, மாயார், பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், ஆனைக்கட்டி, சிறியூர், சொக்கநள்ளி, தெப்பகாடு, செம்மநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற தேர்தலையொட்டி இருளர், குரும்பர் இன ஆதிவாசி மக்கள் நேற்று காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர். அவர்கள் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

மாவனல்லாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கபட்டது. ஆதிவாசி மக்களுடன் மசினகுடி பகுதியில் உள்ள பெரும்பாலான வாக்காளர்களும் ஓட்டு அளித்தனர். மசினகுடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, பொக்காபுரம், ஆனைகட்டி, கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் மாயார் நடுநிலைப்பள்ளி என மசினகுடி பகுதியில் அமைக்கபட்டிருந்த வாக்குசாவடிகளுக்கு வெயிலின் காரணமாக காலையிலே ஏராளமான வாக்காளர்கள் வந்தனர். இதனால் வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகளிவில் இருந்தது. இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு சென்றனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்டு மொத்தம் 106 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 7 மணிக்கு தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் உடனடியாக பணி செய்ய தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது.

எனினும் கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி மற்றும் தெங்குமரஹாடா பகுதியில் கல்லம்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

கல்லம்பாளையம் வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது. இதையடுத்து மாற்று வாக்குப்பதிவு எந்திரம் உடனடியாக வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர்.

வாக்களிக்க வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு பூத் சிலிப் வழங்கப்படாததால் அவர்கள் தங்களது வாக்காளர் பட்டியல் வரிசை எண் தெரியாததால் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com