இருமொழிக்கொள்கை என்பதில் தமிழகம் பின்வாங்காது ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

இருமொழிக்கொள்கை என்பதில் இருந்து தமிழகம் பின்வாங்காது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இருமொழிக்கொள்கை என்பதில் தமிழகம் பின்வாங்காது ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Published on

செம்பட்டு,

தேனியில் இருந்து சென்னை செல்வதற்காக கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டு சிங்கப்பூர் பயணம் சென்றார். அப்போது அவர், கூவம் நதியை புனரமைப்பதற்காக சிங்கப்பூர் செல்கிறேன் என்றார். ஆனால் அவர் சிங்கப்பூர் சென்று வந்த பின்னர் எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யப்படவில்லை. தற்போது அவர் வெள்ளை அறிக்கை கேட்டிருக்கிறார். தி.மு.க. ஆட்சி நடத்திய நேரத்தில் பலமுறை பல எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்டிருக்கிறார்கள். அவர் ஒரு முறையாவது வெள்ளை அறிக்கை கொடுத்து இருக்கிறாரா என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும். கருப்பு பணத்தை முதலீடு செய்வதற்காக அமைச்சர்கள் வெளிநாடு சென்றதாக கூறப்படுவது, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் தகவல் ஆகும்.

பிரிக்கப் பார்க்கிறார்கள்

இருமொழி கொள்கை பற்றி பலமுறை ஜெயலலிதா சட்டமன்றத்தில் விளக்கமாக பதில் கூறியிருக்கிறார். தமிழகத்தில் அண்ணாவின் மொழி கொள்கையான இருமொழிக் கொள்கை மட்டுமே. இது தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை. இதில் எந்த விதத்திலும் தமிழகம் பின்வாங்காது. ஏற்கனவே 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இருந்ததை, மீண்டும் மாணவர்களின் படிப்பு திறமை அதிகமாகும் என்ற நல்ல நோக்கத்தோடு நடைமுறைப்படுத்துகிறோம். எனக்கும், முதல்-அமைச்சர் பழனிசாமிக்கும் சுமுகமான உறவு உள்ளது. பத்திரிகையாளர்கள் தான் பிரிக்கப் பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மாலை 4.20 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட தனியார் விமானம் மூலம் அவர் சென்னை சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com