ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பெங்களூருவில் பதுங்கல் என்.ஐ.ஏ. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பெங்களூருவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அவர்கள் நாசவேலையில் ஈடுபட சதிதிட்டம் தீட்டியுள்ளனரா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பெங்களூருவில் பதுங்கல் என்.ஐ.ஏ. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் 5 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள், பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டி உள்ளார்களா? என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டரானபயங்கரவாதி

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக மத்திய உளவுத்துறை, அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதன்படி, பெங்களூருவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள், தேசிய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய அப்துர் ரகுமான் கைது செய்யப்பட்டு இருந்தார். இவர், சிரியாவுக்கு சென்று அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இர்பான் நாசீர், அகமது அப்துல் காதர் ஆகிய 2 பயங்கரவாதிகளையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அவர்கள், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததுடன், அந்த அமைப்பின் பிரபல தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் மேலும் 5 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

7 பேர் மாயம்

அதாவது பெங்களூரு குரப்பனபாளையா அருகே பிஸ்மில்லாநகரை சேர்ந்த 7 பேர் சமீபத்தில் திடீரென்று காணாமல் போய் இருந்தனர். அவ்வாறு காணாமல் போன 7 பேரின் குடும்பத்தினரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தார்கள். அப்போது 7 பேரையும் பற்றி, அவர்களது குடும்பத்தினருக்கு எதுவும் தெரியவில்லை என்று தெரியவந்தது.

அதே நேரத்தில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் 7 பேரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்திருந்ததும், பெங்களூருவில் பயிற்சி பெற்றுவிட்டு சிரியாவுக்கு சென்றிருந்ததும் தெரிந்தது. அதாவது பெங்களூருவில் இருந்து 7 பேரும் சவுதி அரேபியாவுக்கு சென்றதும், அங்கிருந்து ஈரானுக்கு சென்றுவிட்டு, ஈரான் எல்லை பகுதியில் இருந்து சிரியாவுக்கு சென்றது பற்றிய தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

5 பயங்கரவாதிகள் பதுங்கல்

சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருந்தது. இதையடுத்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதற்காக 7 பேரும் அங்கு சென்றதும், அவர்களில் 2 பேர் உயிர் இழந்திருப்பது பற்றிய தகவலும் அதிகாரிகளுக்கு கிடைத்திருக்கிறது. அதன்பிறகு, மற்ற 5 பயங்கரவாதிகளும் பெங்களூருவுக்கு திரும்பி வந்து, இங்கு பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சிரியாவுக்கு சென்று வந்த பயங்கரவாதிகள் அனைவரும் பெங்களூருவில் உள்ள பழைய மெட்ராஸ் ரோட்டில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தும், பெங்களூரு புறநகர் பகுதிகளிலும் பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கு பயிற்சி பெற்றதும், அவர்கள் அனைவரையும் பயங்கரவாதி அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வரும் இக்பால் ஜமீர் தான் சிரியாவுக்கு அழைத்து சென்றதும் தெரியவந்துள்ளது. சிரியாவுக்கு செல்வதற்காக பாஸ்போர்ட், விசா மற்றும் பண உதவிகளையும் 7 பேருக்கு மட்டும் இன்றி, பெங்களூருவில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இக்பால் ஜமீர் தான் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து வந்துள்ளார்.

நாசவேலையில் ஈடுபட...

குறிப்பாக டாக்டரான அப்துர் ரகுமான் தான் கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள 20 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அவர்களை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விட்டதாகவும், அதுபோல பிஸ்மில்லா நகரை சேர்ந்த 7 பேரையும் அப்துர் ரகுமானே மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்த்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிரியாவுக்கு சென்று வந்துள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பெங்களூருவில் பதுங்கி இருப்பது பற்றிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் பதுங்கி இருந்து, இங்கு நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் எதுவும் தீட்டி உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் பெங்களூருவில் பதுங்கி இருக்கும் 5 பயங்கரவாதிகள் பற்றிய முக்கிய துப்பு அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com