அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள 7 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள 7 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள 7 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
Published on

ஆவடி,

சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் அடங்கிய அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் 15 போலீஸ் நிலையங்கள் மற்றும் 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் என 18 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஒப்புதல் பெற்று அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் முயற்சியில் பட்டாபிராம், ஆவடி டேங்க் பேக்டரி, அம்பத்தூர் எஸ்டேட், திருமுல்லைவாயல், நசரத்பேட்டை, குன்றத்தூர், எஸ்.ஆர்.எம்.சி ஆகிய 7 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

இதற்காக அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சராசரியாக பொதுமக்களின் எந்த ஒரு புகாராக இருந்தாலும் அவற்றை பெற்று வழக்குப்பதிவு செய்து, குறித்த நேரத்தில் 2 தினங்களில் விசாரணை செய்து பொது மக்களுக்கு உதவுவது. போலீஸ்காரர்கள் அன்றாடம் போலீஸ் நிலையங்களில் என்னென்ன வேலைகள் செய்கின்றனர் என்பது போன்ற தகவல்களை மேல் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது.

போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் தகவல் பெட்டிகள் வைத்து அதில் பொதுமக்கள் சார்பில் போடப்படும் புகார்களை அன்றாடம் எடுத்து உரிய நடவடிக்கை எடுப்பது. போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு கணினி பயிற்சி அளித்தல், போலீஸ் நிலையத்தை தூய்மையாக வைத்து இருப்பது.

போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவரும் பொது மக்களிடம் போலீஸ்காரர்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றும் எவ்வாறு புகாரை விசாரிக்கின்றனர் என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்யப்பட்டது.

அத்துடன் துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் உத்தரவின்பேரில் தனி போலீஸ் குழுவினரை அனுப்பி, போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த பொது மக்களிடம் சென்று, அவர்களின் புகார் மனு மீது போலீசார் நடத்திய விசாரணை திருப்தியாக உள்ளனவா? அல்லது போலீஸ் நிலையங்கள் மீது அவர்கள் புகார் கூறுகின்றனரா?. பொது மக்களிடம் போலீஸ்காரர்கள் தவறாக நடந்தனரா? போலீஸ்காரர்கள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனரா? என்பது போன்று பல விசாரணைகளை செய்து அதுபற்றி துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் கேட்டறிந்தார்.

அப்படி குறைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இவ்வாறு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 8 மாதங்கள் போலீஸ் நிலையங்களை கண்காணித்தனர். மேலும் டெல்லியில் இருந்து ஐ.எஸ்.ஓ.2015 தரச்சான்று வழங்கும் தனியார் ஏஜென்சி நிறுவன அதிகாரிகளும் போலீஸ் நிலையங்களை ஆய்வு செய்தனர்.

இவ்வாறு பல்வேறு விசாரணைகள், கண்காணிப்புக்கு பிறகு அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள 18 போலீஸ் நிலையங்களில் சிறப்பாக செயல்பட்டதாக பட்டாபிராம், ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் எஸ்டேட், நசரத்பேட்டை, குன்றத்தூர், எஸ்.ஆர்.எம்.சி ஆகிய 7 போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு இன்டர்நேஷனல் குவாலிட்டி மெனேஜ்மெண்ட் கண்ட்ரோல் என்ற நிறுவனம் ஐ.எஸ்.ஓ. 9001: 2015 தரச்சான்று வழங்கியது.

ராம்குமார் என்பவர் இந்த தரச்சான்று பெறுவதற்கு வழி முறைப்படுத்தினார். இந்த தரச்சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் இந்த ஐ.எஸ்.ஓ.2015 தரச்சான்று பெற்ற 7 போலீஸ் நிலையங்களையும் கண்காணித்து வருவார்கள்.

போலீஸ்காரர்களின் கடின உழைப்பால் இந்த தரச்சான்று பெறப்பட்டதாகவும், தொடர்ந்து மற்ற அனைத்து போலீஸ் நிலையங்களும் தரம் உயர்த்தி விரைவில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com