445 ஊராட்சிகளில் நடந்தது: தொழிலாளர் தின கிராமசபை கூட்டம்

மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
445 ஊராட்சிகளில் நடந்தது: தொழிலாளர் தின கிராமசபை கூட்டம்
Published on

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த மதகுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தச்சன்புதுப்பட்டி கிராமத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் லதா தலைமை தாங்கி பேசியதாவது:-

தொழிலாளர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாளை தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக கிராம பகுதியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தங்கள் ஊராட்சிக்குட்பட்ட திட்டங்கள் என்ன, அதை எவ்வாறு செய்து முடித்திடலாம் என்பதை நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஊராட்சி வளர்ச்சி முழுமையாக தன்னிறைவு பெறும். எனவே ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கடந்த ஆண்டு திட்டமிட்ட பணிகள் முடிவுற்றதா எனவும், முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடித்திட ஒத்துழைப்பு கொடுத்தும் பணிகளை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் நடப்பாண்டிற்கு என்ன தேவை என்பதை ஊர் மக்கள் ஒன்றுகூடி திட்டம் தயாரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஊராட்சியில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கான திட்டத்தை சரியான முறையில் உடனடியாக கட்டிய மூன்று பயனாளிகளுக்கு கலெக்டர் லதா பரிசுகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) விஜய்நாதன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் ராமபிரதீபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் நடைபெற் றது. இதில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். எஸ்.புதூர் இளந்தேவன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய மனுக்கள் பெறப்பட்டன. மேலும் கழிப்பறையை பயன்படுத்த அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. முடிவில் செட்டிகுறிச்சி ஊராட்சி செயலாளர் சகாயராணி நன்றி கூறினார்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com