

சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஸ்ரீ கனகதாச சேவா சமிதி சார்பில், கவி கனகதாசரின் 533-வது ஜென்ம தின விழா மற்றும் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா கலந்துகொண்டு கனகதாசரின் சிலையை திறந்துவைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பா.ஜனதா கட்சி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் ஏழை எளியவர்களின் விரோத கட்சியாக விளங்கி வருகிறது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. டெல்லியில் 3 மாதங்களாக விவசாயிகள் போராடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. குரும்பர் இனமக்கள், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், தங்கள் உரிமைகளுக்காக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நமது இனமக்களுக்கு போட்டியிட தேர்தலில் வாய்ப்பு வழங்காவிட்டால், ஓட்டுபோடமாட்டோம் என்று உறுதியாக, ஒரு மித்த குரலில் மறுத்து விட வேண்டும் என்று பேசினார். இதில், முன்னாள் கர்நாடக மந்திரி எச்.எம்.ரேவண்ணா, கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார், குரும்பர் சமுதாய மாவட்ட தலைவர் கே. திம்மராஜ் உள்பட பலர் பேசினார்கள்.