தமிழகத்தில் நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழலில் கவர்னர் ஆய்வு பணிகளை தவிர்ப்பது நல்லது

தமிழகத்தில் நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழலில் தமிழக கவர்னர் ஆய்வு பணிகளை தவிர்ப்பது நல்லது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
தமிழகத்தில் நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழலில் கவர்னர் ஆய்வு பணிகளை தவிர்ப்பது நல்லது
Published on

திருச்சி,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் 25-ந்தேதி (சனிக்கிழமை) திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நடைபெற உள்ளது.

இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பூஜைகள் செய்து பந்தக்காலை நாட்டினார்.

இதனை தொடர்ந்து ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சியில் வரும் 25-ந்தேதி நடைபெற உள்ள த.மா.கா. பேரியக்கத்தின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மிகப்பெரிய எழுச்சி பொதுக்கூட்டமாக நடைபெறும். இதில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் நிர்வாகிகள், அனைத்து மாவட்ட மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

இந்த கூட்டத்தில் இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரும் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஜோதியை மேடையில் நான் பெற்றுக்கொள்வேன்.

தமிழகத்தில் கவர்னர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், தங்களது கட்சி சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் உள்ள வழக்கு, கோர்ட்டு உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை. இவை எல்லாம் ஆளும் கட்சிக்கு பலவீனம்தான். கவர்னருக்கான பொறுப்பு வரையறுக்கப்பட்டவை தான் என்றாலும் சில பணிகளை செய்ய தடை, தடங்கல் இல்லை. ஆனால் தமிழகத்தில் நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் இதனை தவிர்ப்பது நல்லது. உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனை தனித்து சந்திக்க த.மா.கா. தயாராக இருக்கிறது. அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அப்போதைய அரசியல் சூழ்நிலையில் மக்களின், தொண்டர் களின் மனநிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும். த.மா.கா. பாரதீய ஜனதாவுடன் கூட்டணி ஏற்படுத்தும் என கற்பனை செய்திகளை பரவ விடுவது அவதூறு பிரசாரம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் கோவை தங்கம், விடியல் சேகர், மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல் (மாநகர்), குணா (தெற்கு), ரவீந்திரன் (வடக்கு), விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com