நடிகர்களால் மூன்றாவது அணி அமைவதற்கு சாத்தியமில்லை கே.எஸ்.அழகிரி பேட்டி

நடிகர்களால் மூன்றாவது அணி அமைவதற்கு சாத்தியமில்லை என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
நடிகர்களால் மூன்றாவது அணி அமைவதற்கு சாத்தியமில்லை கே.எஸ்.அழகிரி பேட்டி
Published on

அரியலூர்,

அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அறவழி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். மகளிர் அணி மாரியம்மாள், சுப.சோமு, கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய கோரி இந்த போராட்டம் நடந்தது. முடிவில் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.

ஏர் கலப்பை யாத்திரை

பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், மகாத்மா காந்தி கையில் ராமபிரான் இருந்தபோது ஒற்றுமையும், அமைதியும், வளர்ச்சியும் இருந்தது. அதே ராமபிரான் பா.ஜ.க.வின் அத்வானி கையில் சென்றவுடன் மக்களிடம் பிளவும், கலவரமும், வன்முறையும் ஏற்பட்டது. கடவுள் யார் கையில் உள்ளார் என்பதை பொருத்தே நல்ல செயல்களும், தவறான செயல்களும் நடைபெறுகிறது. தற்போது பா.ஜ.க. நடத்தும் வேல் யாத்திரை தேவையற்றது. மதத்துவேசத்தை ஏற்படுத்தவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. விரைவில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் வளர்ச்சிக்காக ஏர் கலப்பை யாத்திரை நடத்த உள்ளது.

கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா? என்ற கேட்கிறீர்கள். தமிழகத்தில் அரசியல் சித்தாந்தத்தை வைத்தே அரசியல் கட்சிகள் உருவாகும். நடிகர்களால் கட்சிகள் தோன்றுவதோ, மூன்றாவது அணி அமைவதற்கோ சாத்தியமில்லை. அது அணியாக இருக்காது, பினியாக மாறிவிடும். கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயத்தில் முன்னேறாத தமிழகத்திற்கு சிறந்த மாநிலங்களில் இரண்டாவது இடம் என்பது, இவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரு பொய்யுரையை கூறியுள்ளனர். தமிழகத்தில் மத சார்பற்ற கூட்டணியான தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி, வலுவான கூட்டணி. அது வரும் தேர்தலிலும் தொடரும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com