தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களை ஆதிதிராவிடர்கள் என்று அழைத்ததே தவறு - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

‘தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களை ஆதிதிராவிடர்கள் என்று அழைத்ததே தவறு‘ என்று தேனியில் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களை ஆதிதிராவிடர்கள் என்று அழைத்ததே தவறு - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
Published on

தேனி,

புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அவருடன் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் வந்து இருந்தனர். டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் அவர்கள், கலெக்டர் பல்லவி பல்தேவிடம் 80 கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

அந்த மனுவில், தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேவேந்திரகுல வேளாளர் இன மக்கள் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர்கள். அவர்கள் தவறுதலாக தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதில் இருந்து அவர்களை வெளியேற்றி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், அவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்காக மாநாடுகளை நடத்தினோம்.

அடுத்த கட்டமாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அந்தந்த மாவட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வாழும் கிராமங்களில் இருந்து கோரிக்கை மனுக்களை தயார் செய்து மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து வருகிறேன். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் 136 கிராமங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வாழ்கின்றனர். முதற்கட்டமாக 80 கிராமங்களில் இருந்து மனுக்கள் அளிக்கப்படுகிறது. இந்த மக்களை ஆதிதிராவிடர்கள் என்று அழைத்ததே தவறு. அதை சரி செய்ய திராவிட கட்சிகள் தவறிவிட்டன. எனவே இவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று மாநில அரசு உடனே அரசாணை பிறப்பிக்க வேண்டும். இவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் பாலசுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com