நெல்லையில் 38 மையங்களில் நடந்தது: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,782 பேர் எழுதினர்

நெல்லையில் 38 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தர்வு நேற்று நடந்தது. மொத்தம் 6,782 பேர் தேர்வு எழுதினர்.
நெல்லையில் 38 மையங்களில் நடந்தது: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,782 பேர் எழுதினர்
Published on

நெல்லை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் உதவி கலெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரி உதவி ஆணையாளர், கூட்டுறவு துறை துணைப்பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட தீயணைப்பு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு எழுதுவதற்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் தகுதியுடையவர்கள். இந்த தேர்வு எழுத இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், என்ஜினீயர், டாக்டர் என பல பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் தமிழ்நாட்டில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வு நேற்று காலை 44 தேர்வு மையங்களில், 38 இடங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 12 ஆயிரத்து 941 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

6,782 பேர் எழுதினர்

இந்த தேர்வை 6 ஆயிரத்து 782 பேர் எழுதினார்கள். 6 ஆயிரத்து 159 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு எழுத வந்தவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டது. மேலும் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். தேர்வு அறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் நடந்த இந்த தேர்வை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், தாசில்தார் செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த தேர்வை கண்காணிக்க 44 ஆய்வுக்குழு அலுவலர்களும், 4 பறக்கும் படை அலுவலர்களும், தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 11 சுற்றுக்குழு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இந்த தேர்வை கண்காணித்தனர்.

சிறப்பு பஸ்கள்

இந்த தேர்வையொட்டி தேர்வு மையங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

பாளையங்கோட்டையில் தேர்வு எழுத கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் தங்களுடைய குழந்தைகளை பெற்றோரிடம் கொடுத்து சென்றனர். பல பெண்கள் தங்கள் கணவர்களுடன் மோட்டார்சைக்கிளில் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை கணவரிடம் ஒப்படைத்து விட்டு தேர்வு எழுத சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com