ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் 30 பேர் கைது கோவை சிறையில் அடைப்பு

ஈரோட்டில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் 30 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் 30 பேர் கைது கோவை சிறையில் அடைப்பு
Published on

ஈரோடு,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்தி கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் இரவில் இருந்து கைது செய்யப்பட்டனர். அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலை போலீசார் தயார் செய்தனர். அந்த பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளின் வீடுகளுக்கே போலீசார் சென்று தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் அவர்களை கொண்டு வந்தனர். இதையடுத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

கைதான ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளான பாஸ்கர்பாபு, சுகுமார், ரங்கசாமி, சிவக்குமார், நிக்கோலஸ் சகாயராஜ், நாகராஜ், தங்கராஜ், அண்ணாதுரை, அண்ணாமலை, மோகன், வெள்ளியங்கிரி, மணிகண்டன், ஏ.நாகராஜ், ஆனந்தன், குமரவேல், கமலக்கண்ணன், சுப்பிரமணியன், சரவணன், மனோகர், ஆர்.இளங்கோ, பாலசந்திரன், சங்கர சுப்பிரமணியன், செந்தில்வேலன், கதிர்வேல், மயில்வாகனம், ஏ.இளங்கோ, சங்கர், சதீஸ்குமார், செல்வின், அருண் ராமகிருஷ்ணன் ஆகிய 30 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று கோர்ட்டு விடுமுறை என்பதால் கைதானவர்களை ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள முதலாம் எண் மாஜிஸ்திரேட்டு அனுராதாவின் வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்று ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு அனுராதா, கைதான ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் 30 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com