

மதுரை,
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்த 2017-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. அந்த சமயத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பொதுமக்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டியதாக சமூக ஆர்வலர் முகிலன் உள்பட 64 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் இந்த வழக்கு மதுரை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சுந்தரகாமேஷ் மார்த்தாண்டன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருச்சி சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிவில், இந்த வழக்கு வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோர்ட்டில் இருந்து வெளியே வந்த முகிலன், மத்திய அரசின் புதிய வேளாண்மை ஒப்பந்தத்தால் தமிழகம் சோமாலியாவாக மாறும்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.