ஜல்யுக்த் சிவார் திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் கிராமங்கள் வறட்சியற்றதாக மாறியுள்ளன

மராட்டியத்தில் ஜல்யுக்த் சிவார் நீர்சேமிப்பு திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் கிராமங்கள் வறட்சியற்றதாக மாறியுள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
ஜல்யுக்த் சிவார் திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் கிராமங்கள் வறட்சியற்றதாக மாறியுள்ளன
Published on

சாங்கிலி,

கிராமப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு நீர்பாசன வசதிகளை மேம்படுத்திக்கொடுக்க ஜல்யுக்த் சிவார் என்ற நீர் சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தை பானி அறக்கட்டளையின் மூலமாக மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

தற்போது சாங்கிலி மாவட்டம் அவாந்தி கிராமத்தில் பானி அறக்கட்டளை சார்பில் நீர் சேமிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேரில் பார்வையிட்டார்.

மேலும் அவர் அங்கு ஜல்யுக்த் சிவார் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுடன் இணைந்து சிறிதுநேரம் வேலை செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநிலத்தில் 50 சதவீதம் நிலப்பரப்பு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வறட்சி இன்மைக்கான நலத்திட்ட பணிகள், நீர்பாசன திட்டப் பணிகள் அதுமட்டும் அல்லாமல் நீர்பாசனத்திற்கு தேவையான அணைகளை கட்டமைப்பதில் மராட்டிய மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஜல்யுக்த் சிவார் திட்டத்தின் மூலம் வறட்சியில் சிக்கியிருந்த கிராமங்களில் நீர் சேமிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை 11 ஆயிரம் கிராமங்கள் வறட்சியற்றதாக மாறியுள்ளது. நடப்பு ஆண்டிற்குள் மேலும் 6 ஆயிரம் கிராமங்கள் வறட்சியின் பிடியில் இருந்து மீட்கப்படும்.

இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com