குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் கூத்தாநல்லூர் அருகே நடந்தது

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஜமாத் அமைப்பினர் சார்பில் கூத்தாநல்லூர் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் கூத்தாநல்லூர் அருகே நடந்தது
Published on

கூத்தாநல்லூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதக்குடி மற்றும் கூத்தாநல்லூர் ஜமாத் அமைப்பினர் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தேசிய கொடியை ஏந்தி சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்தார்கள், அரசியல் கட்சியினர் மற்றும் இதர அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தொடர்ந்து மழை பெய்தது. ஆனாலும் மழையில் நனைந்து கொண்டும், வயதானவர்கள் சிலர் குடைகளை பிடித்துக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலம்

நன்னிலம் தாலுகா பூந்தோட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஜாமியா மஸ்ஜித் சார்பில் நேற்று ஊர்வலம் நடந்தது. பள்ளிவாசல் முதல் பூந்தோட்டம் அரசலாறு பாலம் வரை சென்ற ஊர்வலம் மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து பள்ளிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூந்தோட்டம் ஜமாத் தலைவர் இதயதுல்லா தலைமை தாங்கினார். ஜமாத் உறுப்பினர்கள் நஜீம், நவுசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் முகமது சலாவூதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முகமது உதுமான், நாம் தமிழர் கட்சி நன்னிலம் ஒன்றிய தொகுதி செயலாளர் அன்புச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் கோபால், விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், ஜமாத் நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலத்தில் பெண்கள், ஆண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com