

மன்னார்குடி,
மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. (அம்மா அணி) மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு அ.தி.மு.க அம்மா அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சி தலைவர் சிவாராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், நகர செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. தொண்டர்களின் கோவிலாக கருதப்படுகிற ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனில் நடந்த வருமான வரி சோதனை அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மத்திய அரசின் ஆளுமைக்குட்பட்டு நடத்தப்படும் சோதனையாகும். இந்த சோதனையை ஒருசிலரை தவிர அமைச்சர்கள் கூட ஏற்கவில்லை. சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து எதிர் அணியில் இருந்தவர்கள் கூட வந்து என்னை சந்தித்தனர். தமிழகம் முழுவதும் இந்த மாற்றம் ஏற்படும்.
ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் இருப்பதாக துணைபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி இருந்தார். அந்த வீடியோவை தேடி இந்த சோதனை நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.
1996-ம் ஆண்டு முதலே சசிகலா விசாரணை வளையத்தில் தான் இருந்து வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும் சசிகலா விசாரணை வளையத்தில் தான் இருந்தார். வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலாவையும் விசாரணை நடத்தினால் உரிய பதிலை அவர் அளிப்பார். ஜெயலலிதா கூடவே இருந்து உதவிகள் செய்ததால் எனது சகோதரி சசிகலாவை சுற்றி பல வழக்குகள் இருந்தது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது அதை வீடியோ எடுக்கும்படி சசிகலாவிடம், ஜெயலலிதாவே கூறி உள்ளார். இது பிற்காலத்தில் உனக்கு உதவும் என்றும் கூறி உள்ளார்.
ஜெயலலிதா கூட இருந்து 30 வருடங்களாக பல உதவிகள் செய்த எனது சகோதரி சசிகலாவுக்கு உரிய பாதுகாப்பை ஜெயலலிதா தராமல் சென்று விட்டார். இதனைப்பார்த்து எல்லோரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜானகி அணி, ஜெயலலிதா அணி பிரிந்த போது ஜெயலலிதாவோடு இருந்து அவரது உயிருக்கு ஆபத்து வந்த போது பாதுகாத்தவன் நான். அந்த சூழ்நிலையை கடந்து வந்த நான், இன்றைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை கண்டு பயந்துவிட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.