ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குதிரை வண்டி பந்தயம்

கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கரூரில் குதிரை வண்டி பந்தயம் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசு வழங்கினார்.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குதிரை வண்டி பந்தயம்
Published on

கரூர்,

ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குதிரை வண்டி பந்தயம் கரூர் பாலிடெக்னிக் முன்பு ஈரோடு ரோட்டில் நேற்று நடந்தது. பெரிய குதிரை, நடுக்குதிரை, புதிய குதிரை என 3 பிரிவுகளில் பந்தயம் நடந்தது. இதில் பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் போக வர 10 மைல் தூரமும், நடுக்குதிரைக்கு 8 மைல் தூரமும், புதிய குதிரைக்கு 6 மைல் தூரமும் எல்கை நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடந்தது. இதில் திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து குதிரை வண்டிகளை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். 3 பிரிவுகளிலும் மொத்தம் 90 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

முன்னதாக நடந்த தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. கரூர் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, கொடியசைத்து குதிரை வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்தார். அப்போது பந்தயத்தில் இலக்கை நோக்கி குதிரைகள் சீறிப்பாய்ந்தன. அப்போது சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை காண முடிந்தது. மேலும் குதிரைகள் ஓடுவதை செல்பி எடுக்க இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் ஆர்வமாக இருந்தனர். குதிரை பந்தயம் நடப்பதையொட்டி கரூர்-ஈரோடு ரோட்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். தற்காலிகமாக அங்கு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ரொக்கப்பரிசு

குதிரை வண்டி பந்தயத்தில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இதில் புதிய குதிரை பிரிவில் மொத்தம் 57 குதிரை வண்டிகள் பங்கேற்றதால், அவை 2 ஆக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. பெரியகுதிரை பிரிவில் கரூர், நெல்லை, கோவையும் மற்றும் நடுக்குதிரை பிரிவில் திருச்சி உறையூர் சதீஷ், உறையூர் விஜயா, ஈரோடு பவானியும் மற்றும் புதிய குதிரை பிரிவில் திண்டுக்கல் பழனி, கரூர், கோவை மற்றும் சேலம், தஞ்சை ஆடுதுறை, கோவை குதிரைகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், துணை தலைவர் தானேஷ் என்கிற முத்துக்குமார், மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன், வேங்கை ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பந்தயம் முடிந்ததும் கரூர் ஈரோடு ரோட்டில் வழக்கம் போல் வாகன போக்குவரத்து நடந்தது.

மாநில அளவிலான கபடி போட்டி

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அ.தி.மு.க.வின் கரூர் வடக்கு நகர கழகம் சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. நேற்று இரவு நடந்த இறுதி போட்டியில் தமிழ்நாடு ஏ அணியை வீழ்த்தி ஒட்டன்சத்திரம் சண்முகா மெமோரியல் கிளப் அணி சாம்பியன்பட்டத்தை வென்றது. சென்னை ஜே.பி.ஆர் கல்லூரி அணி, தமிழ்நாடு பி அணி முறையே 3, 4-வது இடங்களை பெற்றன. மாநில அளவிலான நடந்த போட்டியில் முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.72,072, ரூ.50,072, ரூ.30,072, ரூ.20,072 என ரொக்கப்பரிசுகள் மற்றும் சுழற்கோப்பையினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கி வாழ்த்தினார். போட்டிக்கான ஏற்பாடுகளை வடக்கு நகர செயலாளர் பாண்டியன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com